My Photo
Name:

தமிழ் தமிழிய உணர்வர் .

Tuesday, March 30, 2010

கடைசியாக படித்த கட்டுரை உங்களுக்காக ....
கருணாநிதியும், பக்குடுக்கை நன்கணியனும்


முனைவர் வே.பாண்டியன் ஞாயிறு, 08 நவம்பர் 2009 16:38 கருணாநிதியின் குணக்கேடுகளை அறிந்தவன்தான் நான். 20 வருடங்களுக்கு முன்பே, தேனை எடுத்தவன் புறங்கையை நக்குவதில்லையா என்று கேட்டவராச்சே! ஆனாலும், இம்மனிதர் மீது ஏதோ ஒரு நம்பிக்கை இருந்து வந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, இவர் ஒரு தமிழ்ப்பற்றாளர் என்று காட்டும், வள்ளுவர் கோட்டம் கட்டினார், வள்ளுவனுக்கு சிலை எடுத்தார் போன்ற சில செயல்பாடுகள். இரண்டாவதாக, பார்ப்பனர்களுக்கு இவரைக் கண்டாலே பிடிக்காது. அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமே!



எனவே தான் ஜெயலலிதா இவரை நள்ளிரவில் வாரண்ட் இல்லாமல் கொடூரமாகக் கைது செய்ததைக் கண்டு சில நாட்கள் தூக்கமில்லாமல் அவதியுற்றேன். ஜெயலலிதா என்ற பார்ப்பனத்தி, பாரப்பனீயத்திற் கெதிராகவும், தமிழர்களுக்காகவும் கட்டப்பட்ட தி. மு. க. கட்சியின் ஒரு கிளையின் தலைமையைக் கைப்பற்றிய சூழ்ச்சியை ஜீரணிக்க இயலாத நான், இந்தக் கைதை தமிழனுக்கு பார்ப்பனியத்தால் விடப்பட்ட சவால் என்றே கருதினேன். பார்ப்பனியம் மேலும் மேலும் சவால் விட்டுக் கொண்டேதானுள்ளது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

Karunanidhi



மிக ஏழ்மை நிலையிலிருந்து முன்னேறிய இவர் மீது எனக்கு ஒரு விதமான பெருமித உணர்வும் இருந்தது. அதேநேரம், இவரது தனிநபர் ஒழுக்கம் பற்றிய செய்திகளை நான் அருவறுப்போடு தான் பார்த்தேன். ஒருவரது பொது வாழ்க்கைக்கும் அவரது தனிமனித வாழக்கைக்கும் தொடர்பில்லை, அதனால், பொது வாழ்க்கைக்கு வந்த ஒருவரது தனிமனித வாழக்கையை விமர்சிக்கக் கூடாதென்று சொல்வதை என்றுமே நான் ஏற்றுக் கொண்டதில்லை. பொது வாழ்க்கைக்கு வருபவர், தனது சொந்த வாழ்விலும் குறைபாடில்லாமல் இருப்பது அவசியம். இதை எல்லோருமே "இப்போதாவது" ஒத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.



இந்த பீடிகையோடு இப்போது இக்கட்டுரையின் தலைப்புக்கு வருவோம். பக்குடுக்கை நன்கணியன் என்ற சங்ககாலத்தற்கு முந்தய புலவன். இவர் புலவன் மட்டுமல்ல, கணியனும் கூட. அதாவது, இவர் ஒரு வானியல் அறிஞர். அவரது ஒரு புறநானூற்றுப் பாடல் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப் பிந்திய தமிழகத்தின் புகழ் பெற்றப் பாடல். இந்தப்படாலில் இவர் வைத்த தத்துவம் அக்கால ஆசீவகத் தத்துவத்தின் ஒரு கூறாகக் கொள்ளலாம். ஆசீவகத் தத்துவம் என்பது, பக்குடுக்கை நன்கணியாரின் அனுவியம், மற்கலியின் ஊழியல், நரிவெரூவத் தலையாரின் தற்செயலியம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு பகுத்தறிவுக் கோட்பாடு.



இப்போது "கருணாநிதியின்" தத்துவத்திற்கு வருவோம். இவருடைய தத்துவம், "திரித்தால்" உண்டு வாழ்வென்பதே! மே 17, 18களில் மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. அதாவது, இந்திய வாக்கெடுப்பு முடிந்த உடனேயே! உணர்வுள்ள மொத்த தமிழினமுமே அழுது கொண்டிருந்தது. வாக்குகள் எண்ணப்பட்டன. காங்கிஸ், திமுக கூட்டணி வெற்றி அடைந்திருந்தது. இவரது குடும்பத்திற்குக் கொண்டாட்டம். ஆனால், உலகத் தமிழினமே அழுது கொண்டிருந்தது. இவர் தனது பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைக்கும் பதவி பேரம் பேச, சக்கர நாற்காலியிலமர்ந்தபடியே டெல்லி சென்று, பதவி பேரம் பேசினார். கேட்ட அளவுக்கு இல்லாவிட்டாலும் திருப்தியாகவே பேரம் முடிந்தது. இதற்கெல்லாம் டெல்லிக்குக் கடிதமெழுதுவது வேலைக்குதவாதென்பது தெரியும் இவருக்கு!



வெளியுறவுத்துறையோ, ராணுவத்துறையோ இவர் கேட்கமாட்டார். மற்றபடி broad "ஸ்பெக்ட்ரமாக"த்தான் அவரது கோரிக்கைகள் இருக்கும். முடிந்தவரை இவருக்குகந்த அலைவரிசைகளில் மந்திரி பதவிகள் சமைந்தன. இவர் வீட்டிலே மட்டற்ற மகிழ்ச்சி! மதுரையை ஆண்ட "கள்ளழகர்" (சொல்லைப் பிரித்துப் பொருள் கொள்க!) இப்போது முதன்முறையாக தில்லிக்கு ராசாவல்லவா? ஆனால், தமிழினமே அழுது கொண்டிருந்தது! பாவம் பார்த்தால் தாகம் தீருமா? ஆனால், ஓட்டுப் போடும், "மக்கள் என்னும் ஆட்டு மந்தைகளைச்" சமாளிக்க வேண்டுமே?



ரோமாபுரி எரியும்போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனுக்கு வேண்டுமானால், தன்னை நியாயப்படுத்திக்கொள்ள ஒரு ரோமாபுரிக் கவிதை கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால், தமிழ் அப்படியல்லவே! இது ஒரு உயர்தனிச் செம்மொழி! உலகத் தத்துவங்களுக்கெல்லாம் ஊற்றுக் கண்ணல்லவா இந்த மண்? ஆனால் ஒரு சிக்கல்! கெடுதிக்குத் தத்துவம் சொல்லமாட்டான் தமிழன், மற்ற சமூகங்களுக்கு வேண்டுமானால் அது கைவந்த கலை. அதனால் என்ன? திரித்தால் உண்டு வாழ்வு! அது தான் இவருக்கு கைவந்த கலையாயிற்றே!



ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்

ஈரத்தண் முழவின் பாணி ததும்பப்

புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்

பைதல் உண்கண் பணிவார்ப்பு உறைப்பப்

படைத்தோன் மன்ற, அப்பண்பிலாளன்

இன்னாது அம்ம இவ்வுலகம்

இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே



-பக்குடுக்கை நன்கணியார்.



இதன் பொருள்,



ஒரு வீட்டில் சாவுப்பறை முழங்க, இன்னொரு வீட்டில் திருமண முழவு ஒலிக்கும். ஒரு வீட்டில் இளம் தலைவனும் தலைவியும் கூடி மகிழ்வர், இன்னொரு வீட்டில் கணவனைப் பிரிந்த மனைவி கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பாள். இவ்வாறு இரண்டு வகையாக உலகைப் படைத்துவிட்டான் பண்பில்லாதவன். துன்பம் நிறைந்த இந்த உலகில் இன்னாதவற்றை சிந்தை செய்யாது, இனியனவற்றை மட்டுமே கண்டு மகிழ் என்பது.



போதாதா தமிழகத்தின் நீரோவுக்கு? இதழ்களில் தனது நிலைப்பாடுகளை இதன் அடிப்படையில் நியாயப்படுத்தி கட்டுரையாக வெளியிட்டார் நமது நீரோ! புறங்கையை நக்கித்திரியும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு!



தமிழரின் தத்துவம் பொய்த்து விட்டதா? இவர்கள் இப்படிப் பயன்படுத்தத்தான் இந்தத் தத்துவங்கள் பயன்படுகின்றனவா? என்றெல்லாம் உங்களின் அடிமனதில் எழும் வினாக்கள் நமக்குப் புரிகிறது.



இல்லை தோழர்களே! பக்குடுக்கையாரின் தத்துவம் கருணாநிதியின் நிலைப்பாட்டுக்கு பொருந்தவே பொருந்தாது! உலகிலேயே முதன் முதலாக அணுக்கொள்கையை வகுத்தவர் தான் பக்குடுக்கையார். நிலம், நீர், காற்று, தீ, வெளி என்ற அன்று தனிமங்களாக உணரப்பட்ட இவற்றின் அணுக்கொள்கையை, கிரேக்க எம்பிடாக்ள்ஸ்ஸுக்கு வழிகாட்டியாக உருவாக்கியவர் தான் இந்த பக்குடுக்கை நன்கணியார் (காண்க: வள்ளுவத்தின் வீழச்சி நூலாசிரியர்: குணா). நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன், பக்குடுக்கை நன்கணியார் ஒரு ஆசீவகத் துறவி என்று. ஆசீவகக் கோட்பாட்டின் ஒரு கூறு "தற்செயலியம்".



நமது கட்டுப்பாட்டை மீறி உலகில் நடக்கும் பல நிகழ்வுகள், தற்செயலாக நிகழ்பவையே ஒழிய, அவை "விதிப்படி" நிகழ்பவை அல்ல என்பது தான் தற்செயலியத்தின் அடிப்படைக் கோட்பாடு. விதி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நாம் எப்படியெல்லாம் சுரண்டப்பட்டோம் என்பதை நினைவு கூறுங்கள். அதற்கு எதிரானது தான் தற்செயலியம்.



எனவே, பக்குடுக்கையாரின் தத்துவம் தற்செயலாக நிகழும் நிகழ்வுகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், ஈழப் படுகொலை என்பது கருணாநிதியால் தடுத்திருக்கக் கூடிய ஒரு நிகழ்வு தான். ஆனால், தடுப்பதற்குப் பதிலாக, தனது குடும்ப நலனை முன்னிட்டு, தன்னெழுச்சியாக நடந்த போராட்டங்களை ஒடுக்கினார் அல்லது நீர்த்துப் போகும்படிச் செய்தார். ஈழக் கொடூரங்களுக்கு இவர் ஒரு முதன்மைக் காரணம் என்ற அளவுக்கு இவரின் செயல்பாடுகளும் திரிபுகளும் இருந்தன.



ஒரு ஊரில் ஒரு தெருவில் நடந்த சாவுக்கு (கொலைக்கு) இவர் காரணமாயிருந்து விட்டு, அடுத்தத் தெருவில் இவரது வீட்டில் திருமண நிகழ்வென்றால் உலகம் என்ன சொல்லும்? அந்நிலையில் பக்குடுக்கையார் என்ன பாடி இருப்பார்? இவரது கொடுந்துரோகத்தை மறைக்க, ஒரு அற்புதமான தத்துவப் பாடலை எப்படித் தனக்குகந்த வகையில் திரிக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, நமக்கு அதிர்ச்சி தான் மிஞ்சுகிறது. சுதாரித்துக் கொண்ட நாம், இவரது கடந்த கால செயல்பாடுகளை மீளாய்வு செய்தால் நமக்கு பேரதிர்ச்சி தான் மிஞ்சுகிறது. திராவிட முன்னேற்ற கருணாநிதிகளால், தமிழன் செம்மையாகக் காயடிக்கப்பட்டான் என்பது தான் அப்பட்டமான உண்மை.



ஈழப் படுகொலைகளைத் தடுக்க விடாமல் நமக்கெதிராக கருணாநிதி செய்த திருவிளையாடல்களின், சில சான்றுகளை மட்டும் இங்கே பார்ப்போம்!



முத்துக் குமாரனின் மரணமும், மரண சாசனமும் ஈழ ஆதரவுப் போராட்டத்தில் ஒரு மாபெரும் திருப்புமுனை. இறுதி ஊர்வலத்தில் பல வகையாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். அப்போது ஒரு மாணவர் எழுச்சி உருவாகியது. உண்மையான இனத்தலைவன் அதை நன்கு பயன்படுத்துவான். ஆனால், இவர் விடுமுறை விட்டு, விடுதிகளைக் காலி செய்யவும் உத்தரவிட்டு மாணவர் எழுச்சியை நீர்த்துப் போக வைத்தார்.



அதற்கு முன்பாகவே, சிக்கலை எதிர்கொள்ள முடியாமல் மருத்துவமனையில் "மல்லாந்து படுத்துக்கொண்டே" முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதுவரை இப்படிப்பட்ட அபார சிகிச்சை நடந்ததாக சரித்திரமில்லை. கின்னஸ் விருதுக்காரர்களுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும்! இது தான் முத்துக்குமாரனை வீர மரணத்திற்குத் தூண்டியது. இவரது மருத்துவமனை "நாடகத்தை" முத்துக்குமாரே தனது மரண சாசணத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.



காங்கிரஸையும், தி. மு. க.வையும் விமர்சித்துப் பேசியவர்களை, சீமான், கொளத்தூர்மணி போன்றோரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, அது நீதிமன்றத்தால் கடியப்பட்டதால் விடுதலை செய்யப்பட்டனர்.



ஈழ ஆதரவாளர்கள் மாநாடுகளுக்கும், பேரணிகளுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் முடிந்தவரை அனுமதி மறுக்கப்பட்டது. தமிழகத்தின் முதன்மை ஊடகங்களான சன் டிவியும், கலைஞர் டி.வி யும், ஈழக்கொடுமை செய்திகளை இருட்டடிப்பு செய்தன. இன்றும் செய்து கொண்டுள்ளன!



கடற்கரையில் இவர் நடத்திய உண்ணாவிரத நாடகம் சந்தி சிரித்தது. ஆறு மணிநேர உண்ணாவிரதத்தில் போரை நிறுத்தியவரிடம், இன்னும் குண்டு பொழிகிறதே என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது "மழை விட்டுவிட்டது தூவானம் விடவில்லை" என்ற உவமை சொன்னார். இங்கும் வழக்கம் போல பொருந்தா உவமையால் திரித்தார். மழை பொழிவதும், தூவானமும் நமது கட்டுப்பாட்டை மீறிய இயற்கையின் தற்செயல். ஆனால், போர் என்பது மனிதனால் நிகழ்த்தப்படுவது. இங்கு தூவானத்தின் பொருளென்ன? இவர் வீட்டின் மீது குண்டுமழை பொழிந்தால் அதைத் தூவானம் என்பாரா? என்ன கொடுமை!!!



ராணுவ வாகனத்தை வழிமறித்த ராமகிருஷ்ணனை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தார். பெரியார் தி. க. தோழர்களை வேட்டையாடினார். ஈழக் கொடுமைகள் பற்றிய பரப்புரைக்கான சிடிக்களை பறிமுதல் செய்தார். மாங்கொல்லையில் ஈழத் தமிழருக்காக உயிரையும் கொடுப்பேன் என்றார். பதவியைக் கொடுக்க முடியாத இவர் உயிரைக் கொடுப்பேன் என்றது, அது தானாகப் போகும் போது கொடுப்பேன் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.



இனப்படுகொலைக்கெதிராக தமிழக மக்களை கொட்டும் மழையில் நனைய வைத்து முட்டாளாக்கிய இவர், பிறகு அங்கு இனப்படுகொலை நிகழவில்லை என்றார். தினம் ஒரு பேச்சென்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார்.



தேவையேயில்லாமல் புலிகளின் சகோதரப் படுகொலையைப் பற்றி எதிரியின் மொழிகளில் பேசினார். ஆனால், இவரும் இவரது பேரன்களும் போட்ட சகோதரச் சண்டையில் பலியான அப்பாவிகள் மட்டும் இவரது நினைவுக்கு வராது. இன்று இவர்கள் மீண்டும் கூடி, மத்தியிலும் மந்திரிகளாகவும் ஆகிவிட்டனர். ஆனால், இவர்களது சகோதரச் சண்டையில் மாண்டவன் மாண்டவன் தான்!



எழுதிக்கொண்டே போகலாம். ஏற்கனவே இவரால் அலுப்பாயிருக்கும் உங்களை மேலும் அலுப்பேத்த விரும்பவில்லை. திரட்டு இது தான். செயல்படக்கூடிய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, ஆனால், ஒரு எதிரியைப்போல செயல்பட்டு, தமிழின அழிப்பில் இவருக்கும் ஒரு முதன்மையான பங்கை சந்தேகத்திற் கிடமில்லாமல் ஏற்றிருக்கிறார்.



இவரது துணையோடு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை மறைத்து, இவரது குடும்ப மகிழ்ச்சிக் கொண்டாட்டத்திற்கு, பக்குடுக்கையாரின் பாட்டால் நியாயம் கற்பிக்க இயலாது. அப்படி அவர் முயன்றது இவரது கயமையின் உச்சம்! கருணை என்பது பரிவு! ஆனால், இவரதோ கயமை!! இனி இவரைக் கருணாநிதி என்று எப்படி அழைக்க முடியும்?



இன்னொன்று தோழர்களே! இவர் ஈழம் தனக்கொரு தொல்லை என்றே குறிப்படுவார். அது இவருக்கு மட்டுமே! ஆனால், ஈழம் பிறப்பது ஈழ மக்களைவிட, தமிழகத்திற்குத்தான் மிகவும் முகாமையானது. ஈழம் பிறந்தால் தான் பாக் நீரிணை தமிழருக்குச் சொந்தமாகும். அங்கு நிரந்தர அமைதி வரும். சிங்களத்தில் ஈழம் கரைந்தால், தமிழனுக்கு நிரந்தர சனி!



எனவே, ஈழத்திற்காகப் பாடுபடுவது நமது கடமை. அது ஈழ மக்களுக்கு நாம் போடும் பிச்சை அல்ல! ஈழ மக்கள், தம்மை அழித்துக் கொண்டு, நமக்கு ஒரு வரலாற்று உண்மையை வெளிப்படுத்தியுள்ளனர். அது, இந்தியா தமிழரைக் காக்காது என்பது தான். தமிழருக்கான தனித் தேசங்கள் தான் இறுதித் தீர்வு!



இந்த அரிய உண்மையை உள்வாங்கிப் போராடுங்கள்!!! கொலைஞர்களை இனி நம்பாதீர்கள்!!!!



தமிழர்களே உங்களின் வேற்றுமைகளைக் களைந்து ஒன்றிணையுங்கள். உலகத் தமிழினமே ஒன்றிணையுங்கள்! நம்மைப் பிரிப்பவர்களை இனம் காணுங்கள்.



உண்மையாகவே தமிழன் ஒரு சிறந்த அறிவாளி. கடின உழைப்பாளி. அன்பானவன். திறமையுள்ளவன். இந்த குணங்களை எல்லாம் கூர்தீட்டி, ஒன்றுபட்டுப் போராடினால், நாம் விரும்பியதை அடையமுடியும்...



- முனைவர் வே.பாண்டியன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home