My Photo
Name:

தமிழ் தமிழிய உணர்வர் .

Tuesday, January 12, 2010

நான் இந்து அல்ல... அப்படியானால் நான்??
( ஓர் மறு பதிப்பு )

புதியமாதவி

நான் இந்து அல்ல. இதற்காக சொல்லப்படும் அனைத்து கருத்துகளுடனும் எனக்கும் உடன்பாடுதான். அப்படியானால் நான் ? யார்? எனக்கான அடையாளம் என்ன? நான் என்னை அடையாளப்படுத்திக் கொள்வது மட்டுமே எனக்கான அடையாளமா? அல்லது நான் விரும்பியும் விரும்பாமலும் என் மீது சுமத்தப்பட்டிருக்கும் அடையாளங்களை சுமந்து கொண்டுதான் திரிய வேண்டுமா?



தான் வாழ்நாள் முழுவதும் இந்து மதத்திற்கு பரம எதிரியாக வாழ்ந்த தந்தை பெரியார் மணியம்மையுடனான தன் திருமணத்தைப் பதிவு செய்து கொண்ட போதும் தன் உயிலைப் பதிவு செய்து கொண்ட போதும் தன்னை எந்த அடையாளப் பட்டியலில் அடையாளப்படுத்தினார்? இதை எல்லாம் சிந்திக்கும் போது இந்தியன் என்ற அடையாளம் எம்மீது சுமத்தியிருக்கும் அடையாளங்களை அவ்வளவு எளிதில் அழித்துவிடவோ அப்புறப்படுத்திவிடவோ முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.



நம் வழிபாடுகள்



ஆரியர்கள் கொண்டுவந்த வேதமும் மனுதர்மமும் இந்து மதம் என்றால் அதற்கு முன்பே இம்மண்ணில் வாழ்ந்த நம் மூதாதையர்கள் என்ன மாதிரியான இறையனுபவத்தைக் கொண்டிருந்தார்கள் என்று பார்த்தால் நமக்கு கிடைக்கும் சங்க இலக்கிய சான்றுகளிலிருந்து "நடுகல்வழிபாடு" இருந்தது தெரியவருகிறது.



புற நானூறு 335ல்



"துடியன், பாணன், பறையன், கடம்பன் - இந்நான்கல்லது சிறந்தக் குடியுமில்லை பகைவர் முன்நின்று தடுத்து யானையைக் கொன்று மரணம் அடைந்த வீரனுக்கு எடுத்த நடுகல்லில் நெல்தூவி வழிபாடு செய்வது தவிர வேறு வழிபாடில்லை"



இப்பாடல் சமூகத்தில் அன்று திணிக்கப்பட்ட ஓர் ஆதிக்கத்திற்கு எதிராகக் கவிஞன் எழுப்பியிருக்கும் கலகக்குரல். மேம்போக்காக அணுகாமல் இப்பாடலின் நுண்ணிய கருத்து தளத்தில் நுழைந்தால் எதற்காக ஒரு புலவன் இம்மாதிரி தங்கள் இனக்குழு அடையாளத்தையும் வழிபாட்டு அடையாளத்தையும் ஓங்கி ஒலித்திருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.



எந்த ஒரு நாட்டிலும் பாட்டு பாடி, இசைக்கருவிகள் முழங்க, ஆடிக்கொண்டிருக்கும் மக்கள் மட்டுமே குடிமக்களாக இருந்திருக்கவே முடியாது! புலவர் சொல்லியிருக்கும் துடியன், பறையன் – இசைக்கருவிகளை இசைப்பவர்கள், பாணன் - பாடலிசைப்பவன், கடம்பன்.. -இந்த இசைக்கூட்டத்தில் ஆடுபவன் என்று கொண்டால் “இவர்கள் மட்டுமே இந்த நாட்டின் மிகச்சிறந்த குடிமக்கள்" என்று சொல்லும் நிலைமை ஏற்பட்டுவிட்டது என்றே பொருள் கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் சமூகத்தில் மதிக்கப்பட்ட இக்குடிமக்கள் இடையில் புகுந்த ஆதிக்க சக்திகளால் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு சமூகத்தில் ஒதுக்கப்படும் தருணத்தில் எழுந்த ஒரு குரல்.. அதனால்தான் "வேறு குடியுமில்லை" "வேறு வழிபாடுமில்லை" என்று ஓங்கி ஒலிக்கிறது



புலவர் அடையாளப்படுத்தும் இனக்குழு மக்கள் இன்றைய தலித்துகளாக இருப்பதைக் கவனிக்கும் போது தலித்துகளின் வழிபாடாக "நடுகல்வழிபாட்டை" முன்வைக்கலாம். நாட்டார் தெய்வ வழிபாடுகளும் சிறுதெய்வ வழிபாடுகளும் இதை ஒட்டியே வந்திருக்க வேண்டும். இன்றைக்கும் கிராமங்களில் தைப் பொங்கலுக்கு அடுத்த நாளில் "நீத்தார் நினைவு தினம்" கொண்டாடப்படும். அன்று அக்குடும்பத்தில் இறந்தவர்கள் அனைவருக்கும் அவர்கள் விரும்பியதைப் பொங்கிப் படையலிட்டு கும்பிட்டு வழிபாடு செய்வர். தலித்துகளிடம் இறந்த நாளில் 'திதி’ செய்வதோ "சிரார்த்தம்" செய்வதோ எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இன்றைக்குச் சமூக அந்தஸ்தைக் காட்டும் வகையில் திதியும் சிரார்த்தமும் செய்யும் தலித்திய அக்கிரஹாரங்கள் படித்த தலித்திய சமூகத்தில் உருவாகிவிட்டன.



திராவிட மதம்



திருக்குறள் திராவிடர்களின் வேதம் என்று அடையாளப்படுத்தி இடையில் திராவிட மதம் என்ற கொள்கை எழுந்தது. 1981 மக்கள் தொகை கணக்கெடுப்பு அட்டவணையில் இந்து மதத்திற்கு இணையாக திராவிட மதம் என்ற மதமும் இணைக்கப்பட்டது. (1981 cencsus registers the name of dravida religion with status equal to hindu religion) மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் தமிழக முதல்வரானவுடன் தன் மத அடையாளத்தை "திராவிட சமயம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.



இந்து மதக் காவலர் சுவாமி விவேகானந்தர் திருவனந்தபுரத்தில் இந்துமத தத்துவங்களைப் பற்றி உரையாற்றும் போது கூட்டத்தில் இருந்து "நாங்கள் இந்துக்கள் அல்லர்" என்று குரல் கொடுத்தவர் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை. தமிழ்த்தாய் வாழ்த்து "நீராருங்கடலுடுத்த" எழுதிய அதே சுந்தரம்பிள்ளை. ஆனால் தன்னை இந்துக்கள் அல்ல என்று குரல் கொடுத்த சைவசித்தாந்தமும் தலித்துகளுக்கான இடத்தை வழங்குவதில் இந்துமதத்தின் சாயலாகவே இருந்தது. திராவிட மதம்.. சைவமதம்.. என்று தமிழின அடையாளத்தை முன்னிறுத்திய மதங்களும் தலித்துகளுக்கான மதங்களாக இல்லை.



இந்துமதம் களவாடிய தலித் அடையாளங்கள்



தலித்துகளால் அவ்வளவு எளிதில் இந்துமதத்தின் சில அடையாளங்களை துடைத்து எறிய முடிவதில்லை. ஏன் என்று சிந்தித்தால் அந்த அடையாளங்களில் ஒட்டிக் கொண்டிருக்கிறது தலித்துகளின் தலித்திய அடையாளங்கள். அதனால் தான் அதன் அர்த்தங்கள், தத்துவங்கள் எதுவும் புரியாமலேயே அந்த அடையாளங்களில் ஈர்க்கப்பட்டு தங்களுடனும் தங்கள் வாழ்க்கையுடனும் இணைத்துக் கொண்டார்கள் தலித்துகள் என்கிறார் எம்.சி.ராஜ். பண்டிதர் அயோத்தி தாசரும் இந்து மதம் களவாடிக்கொண்ட பவுத்த மத அடையாளங்களை அடையாளப்படுத்துகிறார்.



> முப்புரி நூலணியும் 'உபநயனம்' பவுத்த முனிவர்கள் தாங்கள் ஞானம் பெற்றதைக் காட்டும் அடையாளம். இதுவே இந்து மதத்தில் பூ நூல் அணியும் பழக்கமாகி இன்று அதுவே பார்ப்பனர்களின் ஒரே அடையாளமாக முன்னிறுத்தப்பட்டுள்ளது வேடிக்கை.



> புத்தரின் அஸ்தியை மஹாபூதி என்று பவுத்தர்கள் போற்றி புத்தம், தன்மம், சங்கம் என்று மூன்றையும் அடையாளம் காட்ட மூன்று கோடுகள் நெற்றியில் போட்டுக்கொண்டார்கள். புத்தரின் மஹாபூதி தீர்ந்தப் பின் சாதாரண சாம்பலை பூசிக்கொண்டார்கள். இதுவே சைவ மதத்தில் திருநீறாகிப் போனாது.



> உயிர்க்கொலை, புலால் உணவு தவிர்ப்பு பவுத்தத்தின் பஞ்ச சீலத்தின் முதல் கொள்கை. பவுத்த பிக்குகள் மக்களிடம் போய் இக்கொள்கையைப் பிரச்சாரம் செய்தால் மக்கள் அதை ஏற்றுக்கொண்டு புஜத்தில் கங்கணம் கட்டி அவல் பிரசாதம் ஈவர். இதன் பொருள் அறியாத பிராமண பூசாரிகள் கோவில்களில் இன்று சிவப்பு - கறுப்பு கயிறுகளை "தாயத்து" என்று சொல்லி விற்று பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள். இந்துக் கோவில் வாசலகளில் கடைகளில் தொங்கிக்கொண்டிருக்கும் கயிறுகளின் கதை இதுதான்.



> சங்கரின் "அத்வைதம்" உண்மையில் "கண்டபாதர்" சொன்னது. கண்டபாதர் பவுத்தர்களுக்கு கடன்பட்டவர். அதனால் தான் துவைதம் (மாத்வர்), வசிஷ்டாத்துவைதம் (ராமானுஜர்) சுத்தாத்வைதம் (வல்லபர்) ஆகியவை சங்கரரரின் அத்வைதத்தை "மாறுவேடமிட்ட பவுத்தம்" என்று விமர்சித்தன.



> பவுத்த மத பெண் தெய்வங்களான மணிமேகலா, சம்பாபதி, தாரா - இந்து மத காளி, பிடாரி, த்ரெளபதையாக பெயர் மாற்றம் பெற்றார்கள்.



> யாகத்தில் ஆடு-மாடுகளை தீயிலிட்டு பொசுக்கி சுட்டு சாப்பிட்டு ருசி கண்ட பார்ப்பனர்கள் புவுத்தத்தின் உயிர்நாடியான உயிர்க்கொலை தவிர்ப்பை தங்களுடையதாக்கிக் கொள்ள புலால் மறுப்புக் கொள்கையை கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள்.



> புத்தரின் போதி மரம் இந்துக்களின் அரசமரமாகி அனைத்து கோவிலகளிலும் தலித்துகளுக்கான புண்ணிய நிழலாகிப்போனது. (அரசமர எல்லையைத் தாண்டி தலித்துகள் உள்ளே நுழையவிடாமல் செய்தது!)



> புத்தர் பன்றி இறைச்சி தின்று செத்தார் என்று கூறிய பிராமணியம் பிறகு அவரை விஷ்ணுவின் அவதாரம், திருமாலின் மறுபிறவி என்று தனக்குள் செரித்துக் கொண்டது.



இவ்வாறகவே பவுதத்தின் கொள்கைகளை இந்துமதம் தன்வயப்படுத்திக் கொண்டு பவுத்தத்தை அதன் பிறப்பிடத்திலேயே அடையாளமின்றி துடைத்து எடுத்ததில் வெற்றி பெற்றது என்று சொல்லலாம். தலித்துகள் பவுத்த கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் என்பதற்கு எண்ணிறந்த சான்றுகள் உண்டு. அதனால் தானோ என்னவோ இந்து மதத்தில் தங்கள் அடையாளமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சில மத அடையாளங்களுடன் தலித்துகள் உளவியல் ரீதியாக ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியும்.



புண்ணியத்தலங்களும் தலித்திய மூதாதையர் வழிபாடும்



மகான்கள் சிலர் தம் உயிரை விடாமல் தன் உடலை அடக்கம் செய்து கொண்டு "ஜீவசமாதி" நிலையை அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. நமது நாட்டில் 18 மகான்கள் அடக்கம் பெற்ற தளங்கள் உள்ளன. பழநி, திருப்பதி, சிதம்பரம், வைத்தீஸ்வரம் சித்தர்கள் அடக்கமாகி இருக்கும் தளங்கள். என்றைக்கும் அந்த மகான்களுடைய ஆற்றல் உடலை விட்டுப் பிரியாது அவர்கள் உலக நன்மைக்காக உடல் அடக்கம் பெற்றபோது எண்ணிய் எண்ணங்கள் எல்லாம் அங்கேயே இருப்பதால் அதை மனிதன் சுற்றி வருகிற போது அவ்விடம் அவனுக்கு ஆற்றல் களமாகவே இருக்கும் என்கிறார் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி என்றழைக்கப்படும் வேதாத்திரி அவர்கள் (மனவளக்கலை தொகுப்பு 2)



"இந்துமதக் கடவுள் கூட்டங்களின் திருவுருவப் படங்களை உங்கள் வீடுகளிலிருந்து அகற்றி விடுங்கள். அதற்குப் பதிலாக உங்கள் மூதாதையரின் திருவுருவப்படங்களை வைத்துக் கும்பிடுங்கள். தினமும் காலையில் எழுந்து அவர்களின் திருமுகத்தைப் பாருங்கள். அவர்களின் எண்ண அலைகள் நம்மை வழிநடத்தும் " என்று எம்.சி ராஜ் அவர்கள் முன்மொழியும் தலித்திய சமய வழிபாடு வேதாத்திரியின் கருத்தை ஒட்டியே இருக்கிறது



இந்தியனும் தலித்துகளும்



இந்திய தேசம் பல்வேறு தேசங்களின் கூட்டமைப்பு என்பதிலும் தேசியம் இல்லாத தேசம் என்பதிலும் இந்திய தேசம் ஆங்கில அரசாட்சியின் போது அவர்களால் உருவாக்கப்பட்ட தேசம் என்பதிலும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.



ஆங்கிலேயர் முதன்முதலாக கல்கத்தாவில் (இன்றைய கோல்கத்தா) உச்ச நீதிமன்றத்தை நிறுவியபோது இசுலாகியர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் சட்டங்கள் இருப்பதைக் கண்டு இந்துக்களுக்கான சட்டம் எது என்று கேட்டபோது கல்கத்தாவிலிருந்த கல்வி அறிவு பெற்ற பார்ப்பனர்கள் மனுதர்மத்தை இந்துக்களின் சட்டம் என்று சொல்லி உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சர்.வில்லியம் ஜோன்ஸ் அவர்களிடம் கொடுத்தார்கள். இப்படித்தான் மனுதர்மம் இந்திய நீதிமன்றத்திற்குள் நுழைந்தது.



"இந்தியாவில் இருக்கிற கிறித்தவன் தவிர முசுலீம் தவிர மற்றவன் எல்லாம் இந்து, அவன் யாராயிருந்தாலும்" அப்படித்தான் இந்திய சட்டம் சொல்கிறது. இந்தியக் குடிமகன்களான நம்மீது சுமத்தப்பட்டிருக்கும் அடையாளம் இது. இக்கருத்தை மிகத்தெளிவாக முன்வைக்கிறார்கள் மெய்னி, டி..எஃப். முல்லா ,வே.ஆனைமுத்து மற்றும் இந்துச்சட்ட மூலங்கள் என்று சொல்லப்படும் Elements of Hindu Law or ordinations of pundits.



இதை அறிந்த பாபாசாகிப் அம்பேத்கர் சட்டத்தில் மிகவும் தந்திரமாக நுழைக்கப்பட்டிருக்கும் வர்ணாசிரம தர்மம், சடங்கு சம்பிரதாயங்களைக் காப்பாற்றும் வரிகளை நீக்க இந்து சட்ட வரைவை முன்வைத்தார்.



(Dr. Ambedkar as chairman of the constitutuon drafting committee was aware that those who prepared the first draft of the constitution in 1947 had cunningly enjoined provisions to protect Varunashrama dharma and traditional customs and usages. with an aim to defeat their purpose , Ambedkar presented the amendment in the form of the "Hindu code bill " in 1947, that all the laws which were in force till date of adoption of the Indian constitution will stand abolished)



ஆனால் நடந்தது என்ன? 1951ல் நாடாளுமன்றத்தில் அம்பேத்கார் கொண்டு வந்த திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மனம் நொந்த அம்பேத்கர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இன்றுவரை அம்பேத்கர் கொண்டுவர விரும்பிய அந்தச் சட்டமாற்றம் எவராலும் கொண்டுவரப்படவில்லை. 1947, 1948, 1951 அம்பேத்கர் செய்த முயற்சிகளும் 1957ல் தந்தை பெரியார் நடத்திய சட்ட எரிப்புப்போரும் 2008 வரை வெற்றி பெறவில்லை.


மதம் அரசின் நடப்புகளிலிருந்தோ பள்ளி பாடங்களிலிருந்தோ பிரிக்க முடியாத அம்சமாகிவிட்டது. வருணம், கடவுள், இந்துமதம், சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தும் அப்படியே நீடிக்க இடம் தருபவைகளாக அரசு, அரசு நிர்வாகம், நீதித்துறை, நம் கல்வி முறை அனைத்தும் இடம் கொடுக்கின்றன. இருந்த இடத்தில் இருந்து கொண்டே பலகோடி வருமானங்கள் ஈட்டும் திருப்பதி வெங்கடசலபதி சிலை நம் இந்திய சட்டப்படி ஒரு உயிருள்ள மனிதன். - as far as these purposes are concerned, venkatachalapathy"s idol is a juridic person-



இன்றுவரை நாம் நம்மை இந்துக்கள் அல்லர் என்று சொல்லிக் கொள்ளலாம், சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளலாம், ஏன் பிள்ளையார் சிலையை நடுசந்தியில் போட்டுடைத்து நம் கலகக்குரலைப் பதிவு செய்து கொள்ளலாம். நான் மனுவிரோதி என்று முத்திரைக் குத்திக் கொள்ளலாம். வேதங்களை, புராணங்களைப் புறக்கணிக்கலாம். எல்லாவிதமான இந்து சமய சடங்கு சம்பிரதாயங்களைத் தலைமுழுகி விடலாம். என்ன செய்து கொண்டாலும் ......விடுதலை இந்தியாவில் ..நாம் எல்லோரும் இந்துக்கள் தான்.. நாம் இந்துக்களே...
 நன்றி
மகிழ்நன் .பா

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home